Wednesday 26 October 2016

ரங்கனே ! எழுந்திராய்!




ஒரு விகற்ப இன்னிசை வெண்பா

பஞ்சணை பாம்பணை பாற்கடல் மாதவா
தஞ்சமுனை நாடி சரணடைந்தேன் நானுமே
அஞ்சற்க ! தந்தேன் அபயமென! ஆட்கொள்ள
பஞ்சணைப் பைசுருட்டு நீ

Wednesday 14 September 2016

சதுரங்கம்



கலி விருத்தம்

காய் காய் காய் மா

முன்னேற்றம் முதலிடமாய் முன்னேறும் நேரே
வன்பகையோ வகுந்திடுமே வலமிடமும் குறுக்கே
தன்னுயிரைப் பணயமிட்டு தன்னுயர்வு காணும்
முன்னெட்டு மெதிரெட்டாய் சதுரங்க வீரர்

சதுரங்க விளையாட்டில் சிப்பாய்(pawn) எனப்படும் வீரர் முன்னெட்டு கட்டத்திலும் அதற்கு எதிராய் எட்டு.கட்டத்திலும் இருப்பர். முன்னேற்றம் ஒன்றே குறிக்கோளாய் முன்புறமே செல்வர். எதிர் அணி வீரர்களுடன் நேரே அடித்து வீழ்த்தாமல் இடமோ வலமோ போரிடுவர். அவ்வாறு முன்னேறி இறுதி கட்டத்தைத் தொட்ட வீரர் ராணியாகவோ, குதிரையாகவோ, யானையாகவோ இல்லை மந்திரியாகவோ மாறி தன் நிலையை உயர்த்திக் கொள்வர்.


மனித வாழ்வு




சிலேடை

 விளம் மா விளம் மா மா

சுற்றிலும் சுவரைப் போலுமி றுக்கச் சட்டை.
உற்றுண ருலவி டுமழகாய் இருக்கும் காற்று.
வெற்றிடம் காணின் உதைபடும் பயிற்சி தன்னில்.
பற்றது நீங்கின் பறக்குமே கூட்டை விட்டு.

பொருள்:

பந்து:

சுற்றிலும் கடினமான உறையால் மூடியிருக்கும். உற்றால் அது உள்ளே அடைக்கப் பெற்ற காற்றால் அழகாக இருப்பதை உணரலாம். எங்கேனும் வெற்று இடம் விளையாட கிடைத்தால் அப்பந்தை காலால் உதைத்து விளையாடுவர். பலமுறை உதைத்த பந்து அதன் இறுக்கத்தை விட்டு காற்றை இழக்கும்.

மனிதன்:

சுற்றிலும் தடிமனான தோலால் ஆன சட்டையை உடையவன். அவனுள் இருக்கும் ப்ராணனாகிய காற்று உடலுள் உலவிக் கொண்டிருக்கும். வெற்றிடங்களில் நடைப் பயிற்சி செய்யும் போதோ, விளையாட்டுகளில் ஈடுபடும் போதோ மூச்சு இறைக்கும்.இந்த உலகத்தின் பற்றை விட்டு நிற்கும் போது ப்ராணனும் உடலை விட்டு நீங்கும்.

போடுவோமா தோப்புக்கரணம்

 




கலித்தொகை

விளம் விளம் மா மா மா

இருசெவி குறுக்கிட யிருக ரத்தால் பிடித்து
ஒருமுகப் படுத்தியே உள்ளுள் மூச்சை நிறுத்து.
ஒருமுறை இருமுறை பலவாய் எழுவா யமர்ந்தே
வருமுனக் கேகண நாதன் தோப்புக் கரணம்.


பொருள்:

இரு காதுகளையும் இரு கரங்களால் குறுக்கே பிடித்து, மூச்சை இழுத்து மனதை ஒருமுகப் படுத்தி ஒருமுறை அல்ல பலமுறை எழுந்து அமர்ந்து செய்தால் உனக்கு கணபதிக்கு தோப்புக்கரணம் செய்ய வரும்.

Saturday 10 September 2016

சிவதாண்டவம்






 விளம் விளம் மா விளம் விளம்( சார விந்தம் என்பது இந்த சந்தத்தின் பெயர்)

வண்டமர் பூங்குழல் வாசன் வெள்ளியங் கிரியினன்
தண்டையொ லிக்கவே வண்டார் குழலியு மிடப்புறம்
செண்டைமே ளமொலியில் சேர்ந்தே திருநட னம்செய
கண்களும் காணவே செய்த பாக்கியம் என்னவோ?

பொருள்:
            வண்டுகள் அமரும் பூக்கள்( வண்டுகள் நறுமணமுடைய பூக்களில் அமரும் என்பது உட்குறிப்பு)  அணிந்த குழலுடைய ஈசன் வெள்ளியங்கிரியில் குடிகொண்டிருப்பவன் தன் இடப்புறம் தண்டையொலித்து நடந்து வரும் வண்டார்குழலியாகிய உமையை கொண்டு செண்டை மேளங்கள் ஒலிக்க நடனமாடுகிறான். அத்தகைய நடனத்தை நாம் காண நம் கண்கள் என்ன பாக்கியம் செய்தது?

Wednesday 27 April 2016

அக்காரக்கனி தரிசனம்


இரு விகற்ப இன்னிசை வெண்பா

நூற்றுப் படியேறி மூச்சிறைக்க முன்னமர்ந்தேன்
நாற்றெலுமிச் சைபானம் நாவில் குளிர்விக்க
வோர்கரம் தோளழுத்த செங்கரம் கைப்பற்ற
நீரிச்சை மந்திக் கிலக்கு.

மூச்சிறைக்க பல படியேறி ஒரு கடை முன் அமர்ந்து எலுமிச்சை சேர்ந்த பானம் அருந்திக் கொண்டிருந்தால் பின்னின்று மந்தியின் ஒரு கரம் என் தோளை அழுத்த மறு கரம் என் கையில் உள்ள பானத்தை பறித்து அருந்தியது.

சோளிங்க நரசிம்ம தரிசனத்துக்கு முன் ஆஞ்சனேயர் தானே தன் தாகம் தீர்த்துக் கொண்டார் போலும்

( பின் மோர் வாங்கி குரங்குகள் அருந்த வைத்து விட்டு வந்தோம்)